தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை – ரஜினிக்கு ‘நோஸ்-கட்’ கொடுத்த முதல்வர்
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறிய நிலையில், வெற்றிடம் எதுவும் இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது என்று, முதல்வர் பழனிசாமி பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
கடந்த மக்களவை தேர்தலில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை தந்து வெற்றி பெற்றார். அதனால்தான், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள், இம்முறை ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்துவிட்டனர்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அ.தி.மு.க. மட்டும்தான். சிலர் அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எம்.ஜி.ஆரை போல் இனி யாரும் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வர முடியாது. வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது என்று, முதல்வர் பேசினார்.
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று மீண்டும் குறிப்பிட்டிருந்த நிலையில், அவரது பெயரை குறிப்பிடாமல் பதில் அளிக்கும் விதமாக முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சினிமாவில் இருந்து இனி அரசியலுக்கு வர முடியாது என்று, ரஜினி மற்றும் கமல்ஹாசனை மறைமுகமாக குறிப்பிட்டு, முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன், வீட்டின் முன் நின்று பேட்டி கொடுத்து வரும் ரஜினியையும், வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர். என்று, முதல்வர் சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






