திமுகவுடையது இருண்ட ஆட்சி… அதிமுகவுடையது சிறந்த ஆட்சி… முதல்வர் இ.பி.எஸ் பிரசாரம்
திமுகவின் ஆட்சி காலம் இருண்டதாக இருந்தது; அதிமுக ஆட்சி காலம் சிறப்பாக இருந்தது என்று, கயத்தாறு பிரசார் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான கடம்பூர் செ.ராஜூ (கோவில்பட்டி), எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), போ.சின்னப்பன் (விளாத்திகுளம்), பெ.மோகன் (ஓட்டப்பிடாரம்), கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) மற்றும் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தூத்துக்குடி) ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கயத்தாறில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் கூறுகிறார். தமிழகத்தில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்த்தப்போவதுமில்லை. திமுகவுக்கு இந்தத் தேர்தல் இறுதித்தேர்தலாக இருக்க, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
அதிமுக மக்கள் இயக்கம். மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்ட கட்சி. தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றால் தான் எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோரின் எண்ணங்களை நிறைவேற்ற முடியும். ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசு எப்போதும் உழைக்கும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, தொடக்க வேளாண்மை வங்கியில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஏப்.1 ம் தேதி முதல் பம்ப் செட்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவித்திருக்கிறோம். ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வாஷிங் மிஷின் வழங்கப்படும். 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். கேபிள் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சட்டம் – ஒழுங்கு சிறந்து விளங்குகிற முதல் மாநிலம் தமிழகம் தான். 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி இருண்ட ஆட்சி. எப்போதும் மின்சாரம் வரும், எப்போது போகும் என்று தெரியாது. அந்தளவு கடுமையான மின்வெட்டு. அதிமுக அரசு திறமையான ஆட்சி செய்த காரணத்தால் தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான செய்தி, அவதூறு செய்தி பரப்பி வருகிறார். சிறந்த மாநிலம் என்பதற்கு சான்று, மத்திய அரசு வழங்குகின்ற விருதுகள் தான். அந்த வகையில் மத்திய அரசின் பல விருதுகளை தமிழகம் பெற்றிருக்கிறது என்று முதல்வர் பழனிச்சாமி பேசினார்.





