குடியுரிமை திருத்தச் சட்டம்: எதிர்க்கட்சிகள் மீது அமித்ஷா சாடல்
குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பரப்பிவரும் பொய் செய்திகள் நாட்டில் அராஜகத்திற்கு வழிவகுத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி இருக்கிறார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிப்பது தொடர்பான ஒரு பிரிவையாவது ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரிகளால் காண்பிக்க முடியுமா என்று சவால் விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பாதுகாப்பிற்காக தான் முன்னுரிமை கொடுத்து வருவதாக அமைச்சர் கூறினார். பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்திய பின்னர், அது போன்ற நடவடிக்கையில் இறங்கிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இஸ்ரேலை அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் பேச வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லாததால் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அவர்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.





