நீட் விலக்குக்கு முதல்வர் விஜய் போராடி வருகிறார் – அமைச்சர் கீர்த்தனா
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு சார்பில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர் போராட்டம் நடந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (21ஆம் தேதி) காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன் தர்ணாவில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், “நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா, “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக, டெல்லியில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையும், அவர்களைக் கைது செய்திருப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களை மீறும் செயலாகும்.
கருத்துச் சுதந்திரத்தையும், அமைதியான முறையில் போராடும் உரிமையையும் பறிப்பது ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல. மேலும், மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியையும் காவலில் எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மக்களின் குரலை ஒடுக்குவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் செயலாகும். நீட் தேர்வு என்பது வெறும் நுழைவுத் தேர்வு அல்ல; அது சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் பிரச்சினையாகும்.
இதனை உணர்ந்து, நீட் விலக்கை வலியுறுத்தி போராடி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். மாணவர்களின் நலனே முதன்மை என்ற நிலைப்பாட்டில், அவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கிறது. மாணவர்களின் குரலை அடக்குவதற்குப் பதிலாக, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உரிய தீர்வை வழங்குவதே ஜனநாயக அரசின் கடமையாகும். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவித்து, ஜனநாயக உரிமைகளை மதித்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.






