--- --:--:-- --

வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

1

தேர்தல் வந்து விட்டதால் பார்ட் டைம் அரசியல்வாதியாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

அப்போது, தாங்கள் தேர்தல் வந்தால் மட்டும், வருகிறவர்கள் அல்ல என்றும், எப்போதும் மக்களுடன் மக்களாக இருப்பவர்கள் என்றார். ஆனால், பார்ட் டைம் அரசியல்வாதியாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். எனவே, பார்ட் டைம் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மேலும், பொய், அவதூறுகளை துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தல் சீசனிற்கு பிரதமர் வருவதாகவும் சாடினார்.வெள்ளம் வந்தால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வர மாட்டார், நிதி கேட்டால் கொடுக்க மாட்டார் சிறப்புத் திட்டம் கேட்டால் செய்ய மாட்டார் எனவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

எனவே, நிதி விவகாரத்தில் கேரளா, கர்நாடக மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றம் கதவுகளை தட்டப்போவதாகவும், வெள்ள நிவாரணம் கேட்டு இன்று வழக்கு தொடர உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.திமுக அரசின் திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது என்று கூறிய முதல்வர் காலை உணவு திட்டம் கனடா நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்து குறிப்பிட்டார்.

 

எதிர்க்கட்சியாக இருக்கிறபோது எப்படி பாஜகவை எதிர்க்க முடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்தும் முதல்வர் விமர்சித்தார். மேலும் கரகாட்டக்காரன் பட காமெடியை எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பிட்டும் முதலமைச்சர் பேசினார்.

 

எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எந்த நிலைமையிலும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை தி.மு.க. எதிர்க்கும் என்றும், தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.

Right Menu Icon