--- --:--:-- --

திருப்பூரில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு

1

திருப்பூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சர் மு.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

 

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்துக்கு கடந்த மாதத்தில் முதலமைச்சர் செல்லவிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 2 நாள் பயணமாக திருப்பூர் மாவட்டத்துக்கு இன்று புறப்படுகிறார். சென்னையிலிருந்து இன்று மாலை 5.30 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்டு, கோவை விமான நிலையம் செல்கிறார்.

 

அங்கிருந்து சாலை மார்க்கமாக மடத்துக்குளம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
உடுமலையில் இன்று இரவு தங்கும் முதலமைச்சர், நாளை காலை, உடுமலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் அம்பேத்கர் சிலைகளை திறந்துவைக்கிறார்.

 

இதனைத் தொடர்ந்து, நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி சென்று, பொதுப்பணித் துறை நீர்வள தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு திருஉருவச் சிலைகளை திறந்துவைக்க உள்ளார்.

 

விவசாயிகள் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக 1,348 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கையும் முதலமைச்சர் திறந்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, நாளை மாலை 3.30 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon