ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை விமான மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் சாலை மார்க்கமாக மானாமதுரை அருகே இடைக்காட்டூருக்கு சென்றார்.
அங்குள்ள இருதய ஆண்டவர் தேவாலயத்தில், ஒரு கோடியே 55 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணியினை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்றார். இரவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின் பேராவூர் பகுதியில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் விழாவில் முடிந்த வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதை தொடர்ந்து 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், ராமநாதபுரத்தில் புதிதாக 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை விமானநிலையம் சென்று, அங்கிருந்து சென்னைக்கு செல்கிறார்.





