கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியில் கனமழையால் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. குருமந்தூர் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால், கோபி – கோவை சாலையில் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, ராயக்கோட்டை, வேப்பனபள்ளி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. வெளியில் வரவே முடியாத அளவுக்கு கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், அஞ்சு வீடு, பழனி பிரிவு, பெருமாள் மலை, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களிலும், ஏரிச் சாலை, லாஸ்காட் சாலை, கல்லறை மேடு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.





