தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்து. இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னை மற்றும் புறநகரில் ஓரிரு இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று மாலை திடீரென மேகம் கருத்த நிலையில் கன மழை கொட்டி தீர்த்தது. 5 மணி நேரம் பெய்த மழையால் மேற்படி வெள்ளக்காடாக மாறியது. இருசக்கர வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.






