“ஓட்டுக்கு துட்டு!” எங்கெங்கு காணினும் பணப்பட்டுவாடா..!! உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம் சிதைந்து விட்டதா..?
இந்த உள்ளாட்சித் தேர்தலில், காசேதான் கடவுளடா..? என்ற ரீதியில் பணத்தை பிரதானமாக வைத்து வேட்பாளர்களும் சரி.. அதை எதிர்பார்த்து பெரும்பான்மை மக்களும் சரி.. எதற்கெடுத்தாலும் காசு, மணி, துட்டு என்ற ரீதியில் நடத்திய விபரீத விளையாட்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்து விட்டதோ.? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்று கடந்த 3 ஆண்டுகளாகவே பெரும் இழுபறியாக இருந்து வந்தது. ஒரு வழியாக, ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி முடிந்துவிட்டது.இன்று இரண்டாம் கட்டத் தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் , எப்போதும் இல்லாத கொடுமையாக ஓட்டுக்காக விதம் விதமாக அரங்கேறிய கூத்துக்கள், தேர்தல் என்பதின் அடிப்படை நோக்கத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டது என்றே கூறலாம்.
பொதுவாக தேர்தல் என்பது, போட்டியில் குதிக்கும் வேட்பாளர்களின் தகுதி, திறமை, யோக்யதை, போன்றவற்றை எடை போட்டு, இவர்தான் நமக்கு நல்லது செய்வார் என பெரும்பான்மையினர் முடிவு செய்ய நடத்தப்படுவது. அதுவும் உள்ளாட்சித் தேர்தல் என்பது, உள்ளூரில் அடிப்படை பிரச்னைகள், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக, நிர்வாகிகளை தேர்வு செய்ய நடத்துவது. இதற்காகவே பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டு, உள்ளாட்சித் தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தியே ஆகவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

உள்ளூரில் தங்களுக்கு சேவை செய்யும் நல்ல மனிதர்களை, யோக்ய வான்களை, ஒட்டுப் போட்டு தேர்வு செய்யத்தான் இந்தத் தேர்தல் முறையே கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக அக்கறையுள்ள, தொண்டு மனப்பான்மையுள்ளவர்கள் தான் தேர்தலில் போட்டியிட முன்வருவர். மக்களும், இந்தத்குதிகளை எடை போட்டு பார்த்துத்தான் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்து வந்தனர். இதனால் எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும், மக்களிடம் செல்வாக்கு இல்லையென்றால் போட்டியிடவே அஞ்சிய காலமாக இருந்தது. இதனால் மக்கள் செல்வாக்கு பெற்ற சாமான்யர்கள் பலரும் பஞ்சாயத்து தலைவர் போன்ற உள்ளாட்சிப் பதவிகளை அலங்கரித்து மக்கள் சேவையாற்ற முடிந்தது.
ஆனால், துட்டு கொடுத்தால் ஓட்டு வாங்கி விடலாம் என்று என்றைக்கு “திருமங்கலம் பார்முலா” அறிமுகமானதோ, அது முதல் தமிழகத்தில் தேர்தல் முறையே தலைகீழாகி விட்டது எனலாம். தேர்தல் என்றாலே பணம் கிடைக்கும் என்ற மோசமான மனநிலைக்கும், பெரும்பாலான வாக்காளர்கள் அடிமையாகி விட்டனர் என்றே கூறலாம். இதனால், சட்டமன்ற, நாடாளுமன்றங்களுக்கு நடைபெற்ற கடந்த சில தேர்தல்களில் பணமே பிரதானமாக விட்டது. பட்டுவாடாவும் தூள் பறக்க ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலான வாக்காளர்களும் ஓட்டுக்கு எவ்வளவு துட்டு கிடைக்கும் என எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
தற்போது உள்ளாட்சித் தேர்தலிலோ, இந்த பண விளையாட்டு உச்சக்கட்டத்துக்கு சென்று, விபரீத விளையாட்டாகி விட்டது என்றே கூறலாம். நடந்த சம்பவங்களும் அதை உறுதிப்படுத்துவது ‘ போல் ஆகிவிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனே பல ஊர்களில் பதவிகள் லட்சக்கணக்கில் ஏலம் போன பகீர் தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டவர்கள், வாக்காளர்களைக் கவர விதவிதமாக இலவசங்களையும், பணத்தையும் வாரியிறைத்துள்ளனர்.

கிராமங்களில் ஓட்டுக்காக மட்டும் ஒரு குடும்பத்துக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பகிரங்கமாக பட்டுவாடா நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் 300 வாக்குகள் கொண்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு போட்டியிடுபவர்கள் கூட ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொடுமை அரங்கேறியது. அது மட்டுமின்றி கறி , விருந்து, மது விருந்து என வாக்காளர்களைக் கவர விதவிதமான கவனிப்புகளை வேட்பாளர்கள் பலரும் அரங்கேற்றினர். சில இடங்களில் வீடு தோறும் அரிசி மூட்டைகள், சேலைகள், தங்க மூக்குத்தி, கம்மல் , மின்விசிறி என விதவிதமான இலவசங்களையும் வாரியிறைத்துள்ளனர்.
பெரும்பான்மை வாக்காளர்களும், தங்கள் ஓட்டின் மதிப்பு, அருமை, பெருமைகளை அறியாமல், பணத்துக்கு அலைபாய்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை. தங்கள் வீட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வேட்பாளர்களிடம் இவ்வளவு கொடு.. என கறாராக பேரம் பேசி பணத்தை கறந்ததும் அரங்கேறியது.
நமக்காக 5 ஆண்டுகளுக்கு சேவகம் செய்ய வேண்டிய பிரதிநிதிகளை தேர்வு செய்ய நடத்தப்படும் இந்த உள்ளாட்சி தேர்தலில் அரங்கேறிய இந்த பண விளையாட்டின் விபரீதம் வாக்காளர்களுக்கு தெரியாமல் போய்விட்டது போலும். வாக்குக்காக வாங்கும் பணம், இலவசம் ஒரு அற்ப சந்தோஷத்தைத்தான் தரும். ஆனால், வியாபாரத்தில் முதலீடு போட்டது போல் லட்சக்கணக்கில் செலவழித்து பதவிகளை கபளீகரம் செய்யும் இந்த முதலைகள், மக்கள் பணியாற்றுவார்களா? அல்லது தேர்தலில் போட்ட முதலீட்டை வட்டியும், அசலுமாக பதவியில் இருக்கும் 5 ஆண்டுகளிலும் மக்களின் பணத்தை அபகரிக்கப் பார்ப்பார்களா? என்று சிந்திக்க மறந்தது ஏனோ.?. இந்த விபரீத விளையாட்டுக்கு முடிவு எட்டப்படுவது எப்போதோ? வாழ்க தேர்தல் ஜனநாயகம்.





