இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு!!
தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் முடிவில் மொத்தம் உள்ள 91, 875 பதவிகளில் 18,750 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள பதவிகளுக்கு 2.31 லட்சம் பேர் தேர்தல் களத்தில் குதித்தனர். பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், முதற்கட்டமாக கடந்த 27-ந் தேதி 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.இதில் 76. 19 % பேர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்நிலையில், 2-ம் கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 46 ஆயிரம் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி பல வாக்குச்சாவடிகளில் 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், வரும் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.





