கடலூரில் பரபரப்பு.. மூச்சுத் திணறல் கண் எரிச்சலால் தொழிற்சாலை மக்கள் போராட்டம்..!
கடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறி மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இரவில் சோதனை நடைபெற்ற பொழுது எதிர்பாராத விதமாக பாயிலருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் தொழிற்சாலை கொழுந்துவிட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தால் தொழிற்சாலையில் இருந்து அதிக அளவில் வெளியேறிய புகையால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண்ணெரிச்சல் ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையிலிருந்து இரசாயன புகை வெளியேறியதாக அச்சமடைந்த மக்கள் தொழிற்சாலை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





