2020-21 நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணி தொடக்கம்
2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரியில் மாற்றம் கொண்டுவர மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை மத்திய நிதி அமைச்சகம் தற்போது தொடங்கியுள்ளது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக அனைத்து தொழில் துறை கூட்டமைப்புகள் தொழில் துறையினரை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்கப்படும்.
ஆனால் முதல் முறையாக இது தொடர்பாக வருவாய்த்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் தனிநபர் வரிவிதிப்பு, கார்ப்பரேட் வரி, மறைமுக வரி உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.





