தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு விவகாரம்..!
தென்காசியில் ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த குமரேசனின் தந்தை நவநீதகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் சந்தேக அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் வி கே புதூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இடப் பிரச்சினை தொடர்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு குமரேசனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது தந்தை நவநீதகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.
குமரேசனின் உயிரிழப்புக்கு உதவி காவல் ஆய்வாளர் உட்பட காவலர்களை காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






