ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதல் – ராகுல் காந்தி
ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதல் என விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கப்படாததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘ஜன நாயகன்’ படத்தை தடுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் பிரதமர் மோடி ஒருபோதும் வெற்றி பெற மாட்டார் என்றும் ராகுல் காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.






