--- --:--:-- --

பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காதவர்களுக்கு ஒரு அறிவிப்பு..!

2

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் வழங்கப்படும் என அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000/- வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

 

அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2026 முதல் 07.01.2026 வரை தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.

 

இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.

 

12.1.2026 அன்று வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 2,04,10,899 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 6123.26 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற 13-ம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளையும் வழங்கப்படும் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon