--- --:--:-- --

கமல் மீது புத்தகம் வீச்சு… திருச்சி பிரசார கூட்டத்தில் பரபரப்பு

Kamal 05

திருச்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது பெண் ஒருவர் புத்தகம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சரத்குமாரின் ச.ம.க.வுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறார். அத்துடன், கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

 

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தியை ஆதரித்து, கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய கமல், எனக்கு ஏழ்மை மீது கோபம் ஏற்படுகிறது, காரணம், ஏழ்மையை அரசியல் கட்சிகள் பேணி பாதுகாத்து வருகின்றன. நேர்மை பசிபோல் இருக்க வேண்டும். நாள்தோறும் நேர்மையாக இருக்க வேண்டும்.

 

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிப்பில், நான் படம் நடித்துள்ளேன். அதற்காக நான் ஊழல் செய்து விடுவேன் என்று அர்த்தமா? தமிழில் வசனம் எழுத ஆள் இல்லை; அதனால் வட நாட்டிலிருந்து, தேர்தல் வெற்றிக்கு ஒருஆள் திமுகவுக்காக அழைத்துவரப்பட்டுள்ளார். லேடியா? மோடியா? என ஜெயலலிதா கேட்டார். நான் கேட்கிறேன் மோடியா? இந்த தாடியா? மத்திய அரசை துணிச்சலோடு கேள்வி கேட்க ஆள் வேண்டும் என்றார்.

 

இந்த கூட்டத்தில் கமல் பேசி முடித்த பிறகு புறப்படும் தருணத்தில், கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் கூச்சலிட்டபடி கையில் இருந்த புத்தகங்களை கமலை நோக்கி தூக்கி வீசினார். எனினும், கமலுக்கு பாதுகாப்பில் இருந்தவர்கள் அதை தடுத்துவிட்டனர். புத்தகத்தால் தாக்க முற்பட்ட பெண்ணை, மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் அங்கிருந்து வெளியேற்றினர்.

 

இந்த சம்பவத்தை படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்களை, மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சம்பவப் பகுதியில் இருந்து கமல் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

Right Menu Icon