தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்..!
நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பப்பதிவு எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில், மார்ச் 3 முதல் 25 வரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில், முடிவுகள் வருகிற 9 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்குகிறது. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நாளை தொடங்கி வைக்கிறார்.
அதன்படி, https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.இதன்பின் சென்னை கிண்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்தாய்வு அட்டவணை, விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர் வெளியிட உள்ளார்.
மாணவர்கள் ஜூன் 6-ஆம் தேதிவரை பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டில் 3 லட்சத்து 8 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



