--- --:--:-- --

மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது..!

1

மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் நாமக்கல்லைத் தொடர்ந்து கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

 

இந்நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.அதன்படி பெரும்பாக்கம் பாஜகவை சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றி கழக உறுப்பினர் சிவனேசன், ஆவடி தவெக நிர்வாகி சரத்குமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் துயர சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு பதியப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

இதற்கிடையே பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்து அழைத்துச் சென்றனர். முதல்கட்ட தகவலில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதற்காக ஃபெலிக்ஸ் கைதாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Right Menu Icon