--- --:--:-- --

கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலை முடிவு..!

6

2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுகளாக போலி ஆசிரியர்களை கணக்கு காட்டியதற்காக 100-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

 

2024-25 கல்வியாண்டில் 45% வரை போலி ஆசிரியர்களைக் கொண்டிருந்த 82 பொறியியல் கல்லூரிகளின் 188 திட்டங்களுக்கு அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஆண்டு 2-க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்களைக் காட்டிய 163 பொறியியல் கல்லூரிகளுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

2023-24 கல்வியாண்டிலும் போலி ஆசிரியர்களைக் காட்டியதற்காக 66 பொறியியல் கல்லூரிகளின் 160 திட்டங்களுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்தக் கல்வியாண்டிலும் 163 கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 2 ஆண்டுகளிலும் மோசடியில் ஈடுபட்ட கல்லூரிகள் பல ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன (overlap) என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஊழலுக்கு எதிரான தன்னார்வத் தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம், 2023-24 கல்வியாண்டில் 224 கல்லூரிகள் போலி ஆசிரியர்களைக் காட்டியதாகவும், 353 நபர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிந்ததாகவும் அம்பலப்படுத்தியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உள் விசாரணையில், 2024-25 கல்வியாண்டில் 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் போலி அடையாளங்கள் மூலம் நிரப்பப்பட்டது தெரிய வந்தது. அண்மையில், போலி ஆசிரியர்கள் விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் 10 அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) வழக்குப் பதிவு செய்தது.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் எடுத்த முடிவின்படி, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் புதிய விதிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 2 போலி ஆசிரியர்கள் வரை உள்ள கல்லூரிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்படும். 2-க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் மற்றும் 500-க்கு மேல் மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம். 2-க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள், 500-க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்.

 

போலி ஆசிரியர்களின் சதவீதம் 40%-க்கும் அதிகமாக இருந்தால், அத்தகைய திட்டங்களுக்கான அங்கீகாரம் ஓர் கல்வியாண்டுக்கு ரத்து செய்யப்படும். மோசடி செய்த கல்லூரிகள், அந்த ஆசிரியர்களின் தவறான பான், ஆதார் எண்களைப் பதிவு செய்துள்ளன, மேலும் அவர்கள் பிற அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பணிபுரிவதாகவும் காட்டப்பட்டுள்ளன. இதற்கு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு அவகாசம் அளித்துள்ளது.

 

கடந்த கல்வியாண்டில் அண்ணா பல்கலை. ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மற்றும் ஆசிரியர்களுக்குத் தனித்துவமான அடையாள அட்டை (Unique ID) முறையை அறிமுகப்படுத்திய பிறகும், மாதாந்திர பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையையும் அறிமுகப்படுத்திய பிறகும் தவறுகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகக் கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சில கல்லூரிகள் தவறுகளைச் செய்திருக்கலாம்.

 

இருப்பினும், அவர்கள் அவற்றைத் திருத்திக் கொண்டனர். மேலும் இந்த ஆண்டு ஆய்வு காணொலியாகப் பதிவு செய்யப்பட்டது என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஒரு தனியார் கல்லூரி அதிகாரி கூறினார். முன்னதாக, இதே விவகாரத்தில் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் இடைநீக்கம் செய்தது. இருப்பினும், அந்த இடைநீக்க உத்தரவை ஆளுநர் ஆர். என். ரவி நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon