--- --:--:-- --

ஆனைமலை ரோலக்ஸ் யானை மரணம்..!

4

ரோலக்ஸ் யானை ஓடையின் அருகில் தண்ணீர் குடிக்க சென்ற போது வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தொண்டாமுத்தூர் பகுதியில் அக்டோபர் 17 ம் தேதி யானை பிடிக்கப்பட்டு மரக்கூண்டில் வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் பராமரிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 12 ம் தேதி மந்திரி்மட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது என தெரிவித்தார்.

 

ரோலக்ஸ் காட்டு யானையை தினமும் ரேடியோ சிக்னல் வைத்து தினமும் நேரில் பார்த்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது எனவும் தெரிவித்தார். இன்று காலை 11.45 மணிக்கு ரேடியோ சிக்னல் கிடைத்த நிலையில் யானை இருக்கும் பகுதியை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர் பிற்பகல் 2 மணி வரை யானை ஊழியர்களின் கண்காணிப்பில் இருந்தது எனவும் தெரிவித்தார்.

 

2 மணி அளவில் அங்கிருந்த ஓடையின் அருகில் தண்ணீர் குடிக்க சென்ற போது வழுக்கி விழுந்தது எனவும் இதை பார்த்த வன ஊழியர்கள் உடனடியாக அங்கு செல்ல முடியாத நிலையில், அரை மணி நேரத்திற்கு பின்பு ரோலக்ஸ் யானையின் அருகில் சென்று பார்த்த போது யானை இறந்து இருப்பது தெரிய வந்தது.

 

 

இதனை அடுத்து யானையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வனத்துறை ஊழியர்கள் எடுத்து அனுப்புவதற்கு தாமதமாகி விட்டது என தெரிவித்த அவர், யானையின் மரணம் குறித்து விசாரிக்க தனிக்குழுவை தலைமை வனப்பாதுகாவலர் அமைத்துள்ளார் எனவும், நாளை இந்த குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். இறக்கத்தில் வழுக்கி விழுந்து யானை உயிரிழந்துள்ளது.

 

 

யானையின் வாயில் சாப்பிட்ட புல் உள்ளிட்டவை இருந்துள்ளது எனவும் அந்த பகுதி பெரிய அளவிலான சரிவு கிடையாது சிறிய குன்றுகள் இருக்கும் இடம் எனவும் ஆனால் அந்த பகுதி மண் வழுக்கும் தன்மை கொண்டதால் யானை வழுக்கி விழுந்து இறந்துள்ளது எனவும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

 

 

யானைக்கு மயக்க மருத்து கொடுத்து 12 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது எனவும் அதன் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். கூடலூர் அருகே பிடிக்கப்பட்டு நெல்லையில் வனப்பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை பாறையில் இருந்த புற்களை சாப்பிட சென்ற போது இடறி விழுத்து இறந்துள்ளது எனவும் தெரிவித்தார். ரோலக்ஸ் காட்டு யானை விடுவிக்கபட்ட மந்திரி மட்டம் பகுதி நல்ல தண்ணீர், தீவனங்கள் அதிகம் இருக்கும் பகுதி அன்னிய தாவரங்கள் இருக்காது எனவும் தெரிவித்தார்.

 

 

யானை கழுத்தில் கட்டப்பட்ட ரேடியோ காலரில் இருந்து, அரை மணி நேரத்திற்கு ஒரு சிக்னல் கிடைக்கும் வகையில் பொருத்தப்பட்டு இருந்தது.ரோலக்ஸ் யானை நலமுடன் இருந்தது உணவும் நல்ல முறையில் எடுத்துக்கொண்டு இருந்தது எனவும் தெரிவித்தார். இதுவரை இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளில் எத்தனை யானைகள் பிழைத்திருக்கிறது என்ற கேள்விக்கு, இதுவரை இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளில் 10 சதவீதம் மட்டுமே மாற்று இடங்களில் தங்கி இருக்கின்றது எனவும், மற்ற யானைகளை மீண்டும் மீண்டும் பிடிக்கும் சூழல் இருந்துள்ளது.

 

 

23 யானைகள் இது வரை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.இது தொடர்பான சரியான தகவல்களை நாளை தெரிவிக்கின்றேன் எனவும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

Right Menu Icon