--- --:--:-- --

காப்பீடு இல்லாத வாகனம் விபத்தை ஏற்படுத்தினால் ஏலம் விடப்படும்

5

காப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்து ஏற்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

மோட்டார் வாகன சட்டப்படி ஒரு வாகனம் விபத்தில் சிக்கினாலோ அல்லது விபத்து ஏற்படுத்தினாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிரிழப்பு, உடல் உறுப்பு இழப்பு அல்லது சொத்துக்கு சேதம் ஏற்பட்டால் காப்பீடு நிறுவனத்திலிருந்து உரிய இழப்பீடு பெற முடியும்.

 

ஆனால் அந்த வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இழப்பீட்டை பெற முடியும். ஒரு வேளை காப்பீடு செய்யப்படாமல் இருந்தால் இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்த சிக்கலை போக்கும் வண்ணம் மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாய சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது .

 

இதன்படி விபத்தில் மரணம், காயம், சொத்து சேதம் ஏற்படுத்திய வாகனமானது மூன்றாவது நபர் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலோ, வாகன உரிமையாளர் விபத்து விசாரணை அதிகாரியிடம் காப்பீட்டின் ஆவணங்களை அளிக்காத நிலையிலும் அந்த வாகனத்தை வெளியில் எடுத்து செல்ல எந்த நீதிமன்றமும் அனுமதிக்கக்கூடாது.

 

அதேபோல விபத்து ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக பிணைத் தொகையை வாகன உரிமையாளர்கள் செலுத்தும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. மேலும் காப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பையோ அல்லது காயத்தையோ ஏற்படுத்தினால் அந்த வாகனத்தை ஏலம் விட்டு 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.

 

விபத்து நிகழ்ந்த பகுதியிலுள்ள மாஜிஸ்திரேட் அல்லது காவல்துறை உயர் அதிகாரிகள் வாகனங்களை ஏலம் விடுவார்கள் என்றும், இது உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. வாகன ஓட்டிகள் இனியாவது தங்கள் வாகனத்திற்கு அவசியம் மூன்றாம் நபர் காப்பீட்டு செய்யவேண்டுமென உணர்த்துகிறது இந்த சட்டத்திருத்தம்.

Leave a Reply

Right Menu Icon