--- --:--:-- --

“கட்சியை விட்டே விலகிய பின் அமமுக மீது அக்கறை ஏன்?”- பெங்களூரு புகழேந்திக்கு உயர் நீதிமன்றம் சூடு!!

rts

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்த பெங்களூரு புகழேந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியை விட்டே விலகிய பின் அக் கட்சி மீது அக்கறை எதற்கு? என்று நீதிபதி காட்டமாக தெரிவித்து, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிப்பதா? என்றும் எச்சரித்துள்ளார்.

 

பெங்கரூரு புகழேந்தி… ஜெயலலிதா காலத்திலேயே, கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்தவர். சசிகலாவின் தீவிர ஆதரவாளராக புகழேந்தி இருந்து வந்தார். டி.டி.வி.தினகரன் தனிக் கட்சி தொடங்கிய போது அவர் பின்னால் சென்றார். அமமுகவிலும் முக்கிய பொறுப்பு வகித்த புகழேந்தி, கடந்த சில மாதங்களுக்கு முன் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகினார். கட்சியிலிருந்து விலகியது முதல் டிடிவி தினகரனையும் சரமாரியாக விமர்சித்து வந்தார்.

 

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணியில் டிடிவி தினகரன் மும்முரமாக உள்ளார். இதற்காக கட்சியில் இருந்த போது புகழேந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்திருந்தனர்.

 

தற்போது கட்சியிலிருந்து விலகிய நிலையில், அமமுகவை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியை விட்டே விலகி விட்ட பிறகு, உறுப்பினரே இல்லாத புகழேந்திக்கு அமமுக மீது அக்கறை எதற்கு? என்று நீதிபதி கண்டித்தார். சொந்தக் காரணங்களுக்காக வழக்குப் போட்டு நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்கக் கூடாது எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

 

அத்துடன், புகழேந்தியின் பிரமாணப் பத்திரத்தை நீக்கிவிட்டு, அமமுகவை கட்சியாக பதிவு செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.புகழேந்தி தொடர்ந்த வழக்கில், அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon