அரசியலில் திடீர் திருப்பம்! அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக
தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக, தேமுதிக அறிவித்துள்ளது.
அதிமுக தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்த நிலையில், சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசரக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இதன் முடிவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது .
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து, ஒரு உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிமுக விலகுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல்.கே. சுதீஷ், அதிமுகவை கடுமையாக சாடினார்.

சுதீஷ் கூறுகையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் இந்தநாளே தேமுதிகவினருக்கு உண்மையான தீபாவளி. வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றார்.
அதிமுகவின் கே.பி. முனுசாமி, உண்மையில் பாமகவின் சிலீப்பர் செல்லாக உள்ளார் என்று சாடிய எல்.கே. சுதீஷ், கேட்ட தொகுதிகளையும், கேட்ட எண்ணிக்கையையும் தராததால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றார்.
சட்டமன்ற தேர்தலில் இதுவரை அதிமுக அணியில் பாஜக ,பாமக உடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெ. தலைமையிலான அரசில் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்பில், இந்த முறை தேமுதிகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

ஆனால் தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக தரமறுத்தது. இதனால் 40 என்ற எண்ணிக்கையை 23 ஆக குறைத்து, தேமுதிக இறங்கி வந்தது. ஆனால் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்து 13 தொகுதிகள், மற்றும் ராஜ்யசபா சீட் மட்டுமே தரப்படும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்த சூழலில் தான் தேமுதிக திடீரென அதிரடி முடிவை எடுத்துள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியான தேமுதிக விலகி இருப்பது, அரசியலில் பெரும் திருப்பமாக கருதப்படுகிறது. தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது.





