--- --:--:-- --

மிசோரம் மாநில இளைஞரின் உடலை 3,300 கி.மீ எடுத்து செல்ல உதவிய தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்!

9

சென்னையில் உயிரிழந்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை அவசர ஊர்தியில் 3,300 கிலோமீட்டர் பயணித்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய உதவி இருக்கிறார்கள் தமிழகத்தை சேர்ந்த ஓட்டுநர்கள். இவர்தான் சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த மிசோரம் மாநில இளைஞர் லால்ரெம்சங்கா.

 

அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக இவரது உடலை 3 நாட்களில் 3 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து ஒப்படைத்து மிசோரம் மக்களின் மனதில் மட்டுமின்றி நாட்டு மக்களின் இதயத்திலும் இடம் பிடித்திருக்கிறார்கள் தமிழகத்தை சேர்ந்த அவசர ஊர்தி ஓட்டுனர்களான ஜெயந்திரன், சின்னதம்பி. எப்படி நிகழ்ந்தது இந்த தேசத்துக்கான நெடும்பயணம்?

 

ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் கடந்த 23ஆம் தேதி சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் 28 வயது மிசோரம் இளைஞர் லால்ரெம்சங்கா . அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் விரும்பினாலும் அனுப்பிவைக்க விமான சேவை இல்லை. இதனால் அவசர ஊர்தி மூலம் உடலை அனுப்ப சென்னையில் உள்ள மிசோரம் மக்கள் நலச் சங்கத்தினர் முடிவெடுத்தனர்.

சென்னையிலிருந்து லால்ரெம்சங்காவின் சொந்த 3,300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அவ்வளவு தூரம் அவசர ஊர்தியில் உடலை கொண்டு செல்ல இரண்டு ஓட்டுனர்கள் தைரியமாக முன் வந்தனர். அவர்கள் தான் ஜெயேந்திரன், சின்னதம்பி. வழிகாட்டவும் மொழி தெரியாத மாநிலங்களில் உதவும் ஒருவர் தேவை என்ற நிலையில் லால்ரெம்சங்காவின் நண்பர் மால்சன் ஹிமா உடன் பயணிக்க தயாரானார்.

 

கடந்த 24ஆம் தேதி தொடங்கிய பயணம் ஆந்திரா ,ஒடிசா, மேற்கு வங்கம், மேகாலயா, அசாம் என ஐந்து மாநிலங்கள் வழியாக தொடர்ந்தது. ஜெயேந்திரன், சின்ன தம்பியும் தலா எட்டு மணி நேரம் மாறி மாறி அவசர ஊர்தியை ஓட்டிச் சென்றனர். ஊரடங்கால் செல்லும் இடமெல்லாம் வெறிச்சோடி கிடக்க திறந்திருந்த ஒன்றிரண்டு ஹோட்டல்களில் பசியாறி பயணத்தை தொடர்ந்து உள்ளார்கள்.

 

மிசோரம் மாநிலத்தில் பயணித்த போது இவர்களின் நெடும் பயணம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொண்ட மக்கள் பல ஊர்களில் கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றுள்ளனர். எண்பத்தி நான்கு மணி நேர பயணத்தில் தலைநகர் அருகே உள்ள கிராமத்தில் லால்ரெம்சங்காவின் உடலை ஒப்படைத்தனர்.

 

லால்ரெம்சங்கா சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார்.ஜெயேந்திரன், சின்னத்தம்பியின் சேவையை பாராட்டும் வகையில் மிசோரம் மக்கள் அவர்களுக்கு தங்களின் பாரம்பரிய உடையை அணிவித்து நன்றி தெரிவித்தனர். இருவருக்கும் பணமும் அன்பளிப்பும் அளித்து பாராட்டிய மிசோரம் முதலமைச்சர் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon