இன்று ஒரு நாள் மட்டும் சென்னை ஐகோர்ட் அனைத்து வாயில்களும் மூடல்..!
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர்நீதிமன்றம் கட்டப்பட்டது. இதனால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அதை அதிக தூரமாக கருதிய மக்கள் உயர்நீதிமன்ற வளாகத்தை பாதையாகப் பயன்படுத்த தொடங்கினர்.
இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக, நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறை ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் இறுதி வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என்றும், இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




