தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை..!
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில், இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை இரவிலும் நீடித்தது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கியது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை கொட்டியது.
திருச்செந்தூரில் கொட்டித்தீர்த்த கனமழையால், சிவன் கோயில் வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியது. இதேபோல, திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் கடலுக்கு வழிந்தோடியது. அதிகளவு தண்ணீர் சென்றதால் கோயிலை ஒட்டிய கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது
தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உளிட்ட இடங்களில் நேற்றும் கனமழை நீடித்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. நாகை மற்றும் கீழ்வேளூர், சிக்கல், புத்தூர், வேளாங்கண்ணி உட்பட மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், திருக்கடையூர், திருவாவடுதுறை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்துவாங்கியது.
சீர்காழி மற்றும் அதைஒட்டிய திருமுல்லைவாசல், கூழையார், பழையார், எடமணல் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.






