அதிமுக கட்சி விதிகளில் அதிரடி திருத்தம்…! 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும்!!
5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்கள் மட்டுமே அதிமுகவில் உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என கட்சியின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கட்சியின் விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடவும் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், அதிமுகவில் 56 மாவட்டங்களாக பிரித்து கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். அதிமுக நிதி ரூ.226 கோடி நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் உள்ளதாகவும், தேர்தல் நிதியாக ரூ.46.70 கோடியும், புதிய உறுப்பினர் சேர்ப்பு மூலம் ரூ.1.9 கோடியும் பெறப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.





