--- --:--:-- --

முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுக செயற்குழுவில் 5 மணி நேரம் நடந்த காரசார விவாதத்தில் இழுபறி… அக்.7-ல் தான் அறிவிப்பாம்!!

10.1

திமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் 5 மணி நேரமாக நடந்த செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே காரசார விவாதம் நடந்தாலும் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. இதனால் யார் முதல்வர் வேட்பாளர் என்பது பற்றி வரும் அக்டோபர் 7-ந் தேதி ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் இணைந்து அறிவிப்பார்கள் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

 

தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது தான் தற்போதைக்கு ஹாட் டாபிக்காக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியில் கெட்டியாக அமர்ந்துள்ள எடப்பாடி தான் நிரந்தர முதல்வர் என அவரது ஆதரவு அமைச்சர்கள் விடாப்பிடியாக உள்ளனர். ஆனால் ஓபிஎஸ் தரப்போ, இந்த முறை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்றே தெரிகிறது. ஜெயலலிதாவால் 3 முறை முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ் என்றும், கட்சியிலும் தற்போது அவருக்குத் தான் ஆதரவு என்றும் அவருடைய ஆதரவாளர்கள் வரிந்து கட்டிக் கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில் தான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த செயற்குழு கூட்டப்பட்டதன் முக்கிய நோக்கமே முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு செய்வது தான். ஆனால் 5 மணி நேரமாக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக காரசார விவாதம் நடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், சில மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளரை இன்றே முடிவெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஆனால் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளோ இதற்கு ஒத்துக் கொள்ளாமல், முதலில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்த பின் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளனர். இப்படியே இரு தரப்பிடையே காரசார விவாதம் தொடர்ந்துள்ளது. இதனால் சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் பற்றிய முடிவை எட்டாமலே நிறைவடைந்துள்ளது.

 

இதையடுத்து செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும். இதனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். வரும் 7-ந் தேதிக்குள் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது தான் ஆயிரம் டாலர் கேள்வியாக உள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் இடையிலான அதிகாரப் போட்டியில் அடுத்த 10 நாட்களில் அதிமுகவில் இன்னும் என்னென்ன குழப்பங்கள் நிகழப் போகிறதோ? என்பது உண்மையான அதிமுக அடிமட்ட தொண்டர்களின் கவலையாக உள்ளது என்றே கூறலாம்.

Leave a Reply

Right Menu Icon