அதிராம்பட்டினம் போராட்ட வழக்கு ரத்து..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சாஜிதா, பாத்திமா, இப்ராஹீம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது, முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இயக்கத் தலைவர்கள் மீது மத்திய அரசு மேற்கொண்ட கைது நடவடிக்கையை கண்டித்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
ஆனால், கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பெருமளவு மக்கள் கலந்துகொண்டதாகவும், இதனால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் கூறி போலீசார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் 304 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கை ரத்து செய்யுமாறு மனுதாரர்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி சுந்தரமோகன் விசாரித்தார். வழக்கின் விவரங்களையும் மனுதாரர்களின் வாதங்களையும் பரிசீலித்த அவர், அனைவர்மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யும் படி உத்தரவு பிறப்பித்தார். இதனால், அதிராம்பட்டினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டு, மனுதாரர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.





