--- --:--:-- --

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் நிகழ்வின்போது திடீர் மின் தடை..!

8

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

 

இத்தகைய சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிச.19-ம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் தொடங்கியது. மறுநாள் (டிச.20) பகல்பத்து உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

 

விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று நடைபெற்றது. அதற்காக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளினார்.

 

உள்பிரகாரங்களில் வலம் வந்து, திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி வந்து அதிகாலை 5.45 மணிக்கு தனுர் லக்னத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்தார். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் “ரங்கா.. ரங்கா.. கோவிந்தா.. கோவிந்தா..” என்று விண்ணதிர பக்தி முழக்கமிட்டவாறு நம்பெருமாளை பின்தொடர்ந்து சொர்க்கவாசலை கடந்துச் சென்றனர். அதன்பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் முன்புள்ள திருகொட்டகையில் பக்தி உலாத்துதல் என்ற நம்பெருமாள் பிரவேசம் கண்டருளினார்.

 

இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் மாநகர காவல் ஆணையர் ந.காமினி தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சில குறைபாடுகள் இருந்ததாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

 

இதனிடையே சொர்க்கவாசல் நிகழ்ச்சியை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.700, ரூ.4000 என இரு பிரிவுகளில் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்திருந்தனர். அதேபோல், உபயதாரர், கட்டளைதாரர், கோயில் ஊழியர்கள், பிறதுறை அத்தியாவசிய பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு கலர்களில் சிறப்பு அனுமதி பாஸ் வழங்கப்பட்டிருந்தது. மேற்கண்ட பாஸ்க்கு ஏற்றவாறு கோயில் உள்ளே செல்ல வழிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

 

கோயில் நிர்வாகத்தால் அச்சடிக்கப்பட்ட பாஸ்கள் கொண்டு வந்த அனைவரின் பாஸ்களும் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே கோயில் உள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறப்பு தரிசன அனுமதி டிக்கெட்டில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வந்தது போலி என கண்டறியப்பட்டு, பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல், ரூ.700 மதிப்புடைய டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் பல ஆயிரங்களுக்கும், ரூ.4000 மதிப்புடைய டிக்கெட்டுகள் ரூ.20 ஆயிரத்திற்கும் தனி நபர்களால் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் கடந்து ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புள்ள திருகொட்டகையில் விடிய விடிய மணல் வெளியில் காத்திருந்த பக்தர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மணல் வெளியில் பக்தர்களை தேடிச்செல்லும் பக்தி உலாத்துதல் என்ற நம்பெருமாள் பிரவேசம் கண்டருளியபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடுவே இருந்த பெருமாள் இருளில் மூழ்கினார். மேலும் பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கூச்சலிட்டனர்.

 

சிலர் கோவிந்தா கோவிந்தா என தத்தம் செல்போன்களை டார்ச்சாக பிடித்தனர். நம்பெருமாள் பக்தி உலாத்தலில் உற்சவருடன் இருந்த தலைமை பட்டர் சுந்தர் பட்டர் பெருமாளின் திருவாபரணங்கள் மீது இரு கைகளையும் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினார். இந்த மின் தடையால் மணல் வெளியில் பெரும் பதட்டம் நிலவியது. அந்தப்பகுதி முழுவதுமே இருளில் மூழ்கியதால், குழந்தைகள், பெரியவர்கள் அவதிக்குள்ளாகினர்.

 

இதுவரை இப்படியான மின் தடை என்பது நிகழ்ந்ததே இல்லாதபோது இந்தாண்டு இருட்டில் பெருமாள் நின்றது பக்தர்கள் மத்தியில் பதபதைப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து மின் விளக்குகள் மீண்டும் எரியத் துவங்கின. பரமபத வாசல் திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்பு நம்பெருமாள் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் மின் தடை ஏற்பட்டது பக்தர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது.

Right Menu Icon