எம்.பிக்கள் உட்பட 181 பயணிகளுடன் டெல்லிக்கு பறந்த விமானம்..!
திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப பிரச்னையால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் உட்பட பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் 181 பயணிகளுடன் நேற்றிரவு திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லிக்கு புறப்பட்டது.
புறப்பட்ட சில மணிநேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
இதனை தொடர்ந்து சுமார் 2 மணிநேரம் வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம், சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்.பி. வேணுகோபால், ஏர் இந்தியா விமானம் தரையிறுக்கும் போது ஓடுதளத்தில் மற்றொரு விமானம் வந்ததாகவும், விமானி துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் பயத்தை காட்டியதாக கூறியுள்ள வேணுகோபால், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருந்ததால் முன்னெச்சரிக்கையாக விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
மேலும் விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் வேறு எந்த விமானமும் வரவில்லை என்று குறிப்பிட்ட ஏர் இந்தியா, பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.





