இந்தியாவில் தீயாய் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்..!
புதிய வகை கொரோனா வைரஸ் காட்டுத்தீயாய் நாளுக்கு நாள் பரவும் நிலையில், அதன் பாதிப்புகள் எப்போது குறையும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியில், இந்தியாவில், கேரளாவில் கொரோனா வைரஸ் முதன் முறையாக உறுதி செய்யப்பட்டது.
இதன் பின்னர், படிப்படியாக ஏற்பட்ட மிகக் கடுமையான பாதிப்புகள் காரணமாக, சுமார் இரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதும் பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்டது.இதனால், உயிரிழப்பு மட்டுமின்றி, பொருள் இழப்பும் வரலாறு காணாத அளவுக்குக் காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக, உலக அளவில் 2020 முதல் 2023 வரை சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் காணப்பட்டன.
வரலாறு காணாத அளவுக்குப் பொருளாதார பாதிப்புகள் உலகம் முழுவதும் ஏற்பட்டு, மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். அதன் பின்னர், பாதிப்பு மெல்ல மெல்லக் குறைந்து, உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.இந்த நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், புதிதாக கொரோனா வைரஸ் பரவி வருவது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 6496 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 358 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சில நிம்மதி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.முந்தைய கொரோனா வைரஸ் உடன் ஒப்பிடும்போது, தற்போது பரவும் வைரஸ் ஆனது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இதனுடைய ஆயுட்காலம் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் காலம் என்பது மிகவும் குறைவானதாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, தற்போது பருவமழை காலம் காணப்படுவதால், இந்த வைரஸ் அதிகம் பரவுவதாகவும், பருவமழை முடிந்த பின்னர் இதன் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து விடும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்தியாவைப் பொறுத்த அளவில், கேரளாவில் அதிகபட்சமாக 1950 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.






