--- --:--:-- --

பூந்தமல்லி- போரூர் மெட்ரோவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் புதிய வசதி..!

8

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் மெட்ரோ ரயில் சேவையில், இரண்டாம் கட்டப் பணிகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

 

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்தில், ‘ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்’ (Driverless Metro) இயக்கப்பட உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆளுயர நடைமேடை தடுப்பு கதவுகள்’ (Full Height Platform Screen Doors – PSD) அமைக்கப்பட்டுள்ளன.

 

முதல் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இத்தகைய கதவுகள் இல்லாததால், ரயில் வரும்போது பயணிகள் தண்டவாளத்தின் மிக அருகில் நின்று விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. ஆனால், இரண்டாம் கட்ட மெட்ரோவில் ரயில் நிலைய நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே இந்தத் தடுப்பு கதவுகள் இருக்கும். ரயில் சரியாக நடைமேடையில் வந்து நின்ற பின்னரே இந்தக் கதவுகள் தானாகத் திறக்கும், அதன் பிறகே பயணிகள் ரயிலுக்குள் செல்ல முடியும்.

 

முதற்கட்டமாக பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் உள்ள 10 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி முல்லைத்தோட்டம், கரையாஞ்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு உள்ளிட்ட நிலையங்களில் இந்தக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

தற்போது பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான வழித்தடத்தில் 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத் திட்டத்தின் அனைத்து 118.9 கி.மீ தொலைவிலும் உள்ள அனைத்து நிலையங்களிலும் இந்த ஆளுயரத் தடுப்பு கதவுகள் அமைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon