--- --:--:-- --

இறந்த வி.ஏ.ஓ மகனிடமே கூசாமல் லஞ்சம்? திருவாடானையில் மனச்சாட்சியற்ற “மட்டமான மாரிமுத்து ஆர்.ஐ”!

kuttram kuttrame_page-0001

திருவாடனை பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்துபோன ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-வின் மகனிடமே, வாரிசுச் சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் மாரிமுத்துவின் செயல், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. `மண்ணுக்குள் மறையும் முன்பு மக்களிடம் கொஞ்சமாவது நல்ல பெயர் வாங்கவேண்டுமென்று ஆசை இல்லையா மாரிமுத்து?’ என்று பலரும் பொங்குகின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே உள்ள டி.நாகினிகுரூப் கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர், சக்திவேல் என்கிற மாஸ்கோ. தனது பணிக்காலத்தில் மிகவும் நேர்மையாக இருந்து, அரசின் சேவைகள் மக்களுக்காக எளிதாகக் கிடைக்கும் வகையில் பணியாற்றி நற்பெயர் எடுத்தவர் சக்திவேல். அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து போகாமல் மக்களுக்கு சேவையாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

 

இதன் காரணமாக, வருவாய்த்துறையில் லஞ்சத்தில் திளைத்த அதிகாரிகள் பலருக்கு வி.ஏ.ஓ சக்திவேல் என்றாலே வேப்பங்காயாகக் கசக்கும். கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராகவும் பொறுப்பில் இருந்தவர். சில மாதங்களுக்கு முன்பு, சக்திவேல் பணி ஓய்வு பெற்றார்.

 

இந்த நிலையில், கடந்த 3 வாரங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் சக்திவேல் காலமானார். இதனால், அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது. ஒருவழியாக சோகத்தில் இருந்து மீண்டு, அடுத்த வேலைகளை அவரது குடும்பத்தினர் கவனிக்கத் தொடங்கினர். அப்போது, காலஞ்சென்ற சக்திவேலுவின் குடும்பத்தினருக்கு வாரிசுச் சான்றிதழ் தேவைப்பட்டது. இதையடுத்து அவரது மகன் வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரை கையொப்பம் கேட்டு, தற்போதைய வி.ஏ.ஓ. கார்த்திக்கை அணுகினார். அவரிடம் வேலை எளிதாக முடிந்த நிலையில், அடுத்து தற்போதுள்ள வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.) மாரிமுத்துவிடம் வாரிசுச் சான்றிதழுக்கான மனுவை வழங்கியுள்ளார்.

 

ஆர்.ஐ. மாரிமுத்துவோ வித்தியாசமானவர். `அவனின்றி அணுவும் அசையாது’ என்பார்கள். மாரிமுத்துவிடம் `பணமின்றி எதுவும் நடக்காது’ என்பதே உண்மை. ஏற்கனவே பரமக்குடியில் இவர் இருந்தபோது கையில் பணத்தை நீட்டினால் தான் கையொப்பம் என்பது மாரிமுத்துவிடம் எழுதாத சட்டமாக இருந்தது. இதனால், ஆர்.ஐ மாரிமுத்து என்றாலே மக்கள் மிரண்டு புலம்புவார்கள். லஞ்சம் வாங்கிப்பழகிய மாரிமுத்து மீது, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் அளிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. இந்த நிலையில் தான் திருவாடனை பகுதிக்கு மாற்றலாகி வந்தார்.

ஆர்.ஐ மாரிமுத்து
ஆர்.ஐ மாரிமுத்து

சில மாதங்களுக்கு முன்பு, ஆர்.ஐ மாரிமுத்து சாலைவிபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, கிராம நிர்வாக அலுவலராக இருந்த இதே சக்திவேல் என்கிற மாஸ்கோ, உடனடியாக பழங்களை வாங்கிக் கொண்டு நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார். அத்துடன், கையில் இரண்டாயிரம் ரூபாயை கொடுத்து வந்தார். இப்படிப்பட்ட ஒரு மனிதரின் மகன் தான், தற்போது வாரிசுச் சான்றிதழ் கேட்டு மாரிமுத்துவை அணுகியுள்ளார். ஏதோ முன்பின் தெரியாத நபரைப் போல், அவரை விசாரித்துள்ளார். தனக்கு பழங்களை வாங்கி வந்த சக்திவேல் பற்றி முழுமையாகத் தெரிந்தும் கூட, அவரது குடும்பம் பற்றி கேட்டு, ஒரு மணி நேரத்திற்கு மேல் அலைக்கழித்துள்ளார்.

 

பின்னர், வீட்டை நேரில் பார்த்து விசாரித்த பிறகு வாரிசுச் சான்றிதழ் தருவதாக கூறியுள்ளார். அத்துடன் நிற்காமல், வாய் கூசாமல் காலஞ்சென்ற வி.ஏ.ஓ சக்திவேலின் மகனிடம் வாரிசுச் சான்றிதழ் வழங்குவதற்கு ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கேட்டுள்ளார். கடைசியில் ஆயிரம் ரூபாயை கொடுத்த பின்னர், சார் இது போதுங்களா என்பதுபோல் அப்பாவித்தனமாக ஆர்.ஐ. மாரிமுத்துவிடம் கேட்டுள்ளார் சக்திவேலின் மகன். கடைசியில் ஒருவழியாக வாரிசுச் சான்றிதழ் கிடைத்தது என்பது வேறுகதை.

 

ஆனால், சக வருவாய்த்துறை ஊழியரின் மகனுக்கே, அதுவும் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போது, பழங்களுடன் பணத்தையும் கொடுத்து விசாரித்துச் சென்றவரின் வாரிசுக்கே சான்றிதழ் வழங்க, துளியும் நன்றிக்கடன் இல்லாமல் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. மாரிமுத்துவின் செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படியென்றால் பொதுமக்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!

 

நெஞ்சில் கொஞ்சமாவது ஈரமிருந்தால், ஆர்.ஐ. மாரிமுத்து இப்படிச் செய்வாரா? மண்ணுக்குள் மறையும் முன்பு மக்களிடம் கொஞ்சமாவது நல்ல பெயர் வாங்கவேண்டுமென்று ஆசை இல்லையா மாரிமுத்து ? என்று பலரும் பொங்குகின்றனர். இதுபோன்ற லஞ்ச லாவணியத்தில் திளைக்கும் அலுவலர்களால், ஒட்டுமொத்த வருவாய்த்துறைக்கும் அலுவலர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. ஆளும் அரசு மீதும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

 

எனவே, ஆர்.ஐ. மாரிமுத்து போன்ற ஊழல் பெருச்சாளிகள் மீது தயவு தாட்சண்யம் பார்க்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிட மாறுதல் போன்று பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்காமல், சட்ட ரீதியாக கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Right Menu Icon