--- --:--:-- --

‘குற்றம் குற்றமே’ செய்தி எதிரொலி! லஞ்சம் வாங்கிய துறையூர் பிடிஓ சஸ்பெண்ட்..அரசின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் நிம்மதி!

6.1

சுமை இல்ல பயனாளிகளிடம், துறையூர் பி.டி.ஓ. மணிவேல் லஞ்சம் வாங்கியதை, முதன்முறையாக வீடியோவுடன் “குற்றம் குற்றமே” இணையதளம் செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்திய நிலையில், அவரை தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

 

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (பி.டி.ஓ) இருப்பவர் மணிவேல். இவரை, பச்சமலை அருகே உள்ள வண்ணாடு ஊராட்சியை சேர்ந்த பசுமை வீடு திட்ட பயனாளிகள் சிலர், மே 16ம் தேதி சந்தித்தனர்.

 

அப்போது பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, பி.டி.ஓ. மணிவேல் லஞ்சம் கேட்டுள்ளார். அதாவது, 5 பயனாளிகளிடம், முதல் தவணையாக தலா 3,000 ரூபாய் வீதம் மொத்தம் 15,000 ரூபாயை, மணிவேல் பெற்றுக் கொண்டார். லஞ்சம் வாங்கும் இந்த காட்சி, ரகசியமாக வீடியோவில் பதிவானது.

 

அந்த வீடியோவில், பயனாளிகள் மிகவும் தயங்கியவாறு பி.டி.ஓ.விடம் கெஞ்சியபடி தங்களுக்கு வீடு ஒதுக்குவது பற்றி கேட்பதும், லஞ்சத்தொகையை பி.டி.ஓ.விடம் வழங்கிவிட்டு கைகூப்பியவாறு கேட்டுக் கொள்ளும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

 

இது குறித்த செய்தியும் மற்றும் வீடியோவும், முதல்முறையாக “குற்றம் குற்றமே” இணையதளத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, சமூகவலைதளங்களிலும் இந்த செய்தி வைரலானது; பலரும் “குற்றம் குற்றமே” செய்தியை அதிகளவில் பகிர்ந்தனர். இத்தகவல், தமிழக அரசின் கவனத்திற்கும் சென்றது.

 

இதன் பலனாக, துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவேல் மீது, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஆக பணி புரிந்து வரும் மணிவேல், பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பயனாளிகளிடம் விதிகளுக்கு புறம்பாக பணத்தை பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

 

இதை தொடந்து, விசாரணையின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மணிவேல், தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார் என்று, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குற்றம் எங்கு நடந்தாலும் துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் “குற்றம் குற்றமே” செய்தியின் எதிரொலியாக, லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வந்த பி.டி.ஓ. மணிவேல் மீது தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக, “குற்றம் குற்றமே” இதழுக்கு, அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

 

திருச்சிராப்பள்ளி ஆட்சியரின் நடவடிக்கை, வெறும் கண் துடைப்பாக இல்லாமல், மணிவேலிடம் தீவிர விசாரணை நடத்தி, வேறு ஏதேனும் முறைகேடுகளை அவர் புரிந்துள்ளாரா என்று விசாரித்து, சட்டத்திற்கு உட்பட்டு கடும் தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Right Menu Icon