தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணப்பாறை அருகே உள்ள படுகைகளம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ்.
நேற்று இரவு சிங்கப்பூர் செல்வதற்காக தனது எலக்ட்ரிக் பைக்கில் மணப்பாறை வந்த இவர் ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள தனது நண்பர் பாலு என்பவரது கடையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இன்று காலை எலக்ட்ரிக் பைக்கை எடுத்து வெளியே வைத்த போது பைக்கின் பேட்டரியில் இருந்து திடீரென புகை கிளம்பியது.
தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்த சிறிது நேரத்தில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அரியலூரில் எலக்ட்ரிக் பைக் வெடித்து தீப்பற்றியதில் தந்தை மகள் உயிரிழந்த நிலையில் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் தீப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






