இலங்கையில் சிலிண்டர் விலை ரூ2,657க்கு விற்பனை..! 1 லிட்டர் பாலின் விலை 250 ரூபாய்..!
இலங்கை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 90 விழுக்காடு வரை அதிகரித்து 2 ஆயிரத்து 657 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் விலை அதிகரித்து 2 ஆயிரத்து 657 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் விற்பனை ஆகிறது. அதைப்போல ஒரு லிட்டர் பால் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
எனினும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உள்ளதால் சமூக வலைத் தளங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கையில் கொரொனா தொற்று வேகமாக பரவிய நிலையில் அந்நிய செலாவணியை குறைக்க இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால் இலங்கையில் பால் பவுடர் முதல் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.






