அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கலன்கள் திறந்து வைத்தார் மோடி..!
தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்பட்ட ஆக்சிஜன் கலன்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 35 இடங்களில் ஆக்சிசன் கலன்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ஆக்ஸிஜன் கலன்கள் திறக்கப்பட்டன. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் கலன்களை மதுரை எஸ் வெங்கடேசன் திறந்துவைத்தார்.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மையத்தை ஆட்சியர் திறந்து வைத்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் பிஎம் கேர் நிதி மூலமாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி கலன்களை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
இதேபோல கும்பகோணம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஆத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் கலன்கள் திறந்து வைக்கப்பட்டன.






