தமிழகம் முழுவதும் இரவு முழு ஊடரங்கு தொடங்கியது.. திருப்பூரில் போலீசார் தீவிர வாகன சோதனை!
இந்தியா முழுவதும் 2 வது அலையாக கொரோனா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதேபோல் தமிழகத்திலும் கொரோனோ தொற்று நோய் வேகமாக பரவி வருவதுடன் தினமும் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து தமிழக அரசு இன்று இரவு முதல் 14 நாட்களுக்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு அடைப்பு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் இரவு முழுவதும் அனைத்து கடைகள் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்பட தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அடைக்க உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களும் தகுந்த காரணமின்றி வெளியே நடமாடக்கூடாது என்று எச்சரித்து உள்ளது.

இதனைதொடர்ந்து இன்று இரவு 9 மணி முதலே முழு அடைப்பு தொடங்கியது. திருப்பூர், அவினாசி, பூண்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா,அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களை சோதனையிட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விதிமுறைகளை மீறி, மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வருகிறார்கள்.

திருப்பூர் முழுவதும் போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். ரம்ஜான் மாதம் நடந்து வரும் நிலையில் இரவு தொழுகைகளை அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் 9.30 க்குள் நடத்தப்பட்டு, உடனே அவரவர்கள் வீடுகளுக்கு வேகமாக சென்று அடைந்தனர்.
இதனால் எங்குமே மக்கள் நடமாட்டமே இல்லை. சில லாரிகள் மட்டும் சென்றன. அவைகளும் இன்னும் சில நிமிடங்களில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டுவிடும்.
அவிநாசி புதிய பஸ்நிலையத்தில் வெளியூர் செல்ல பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. எங்கும் செல்லமுடியாது. அதனால் வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். நகரில்
ஒரு சில இடங்களில் மட்டும் மருந்து கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.





