திருப்பூர் தேர்தல் ஏற்பாடுகள் தயார்… கலெக்டர் விஜய கார்த்திகேயன் பேட்டி
திருப்பூர் மாவட்டத்தில் நாளைய தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக்கடமையை ஆற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவிநாசி தொகுதிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு பல்லடத்தில் ஆய்வு செய்துள்ளேன்.
தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக இம்முறை கோவிட் தடுப்பு உபகரணங்கள் வினியோகம் செய்யப்படுவதோடு, வழக்கமான தேர்தல் நடத்துவதற்கான சாதனங்கள் 3 பகுதிகளாக பிரித்து அனுப்பி இருக்கிறோம். தேர்தல் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை ரேண்டம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 13787 தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிற்பகலுக்குள் அவரவர்கள் தத்தமது வாக்குச்சாவடிக்கு சென்று விடுவார்கள். இப்பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேர்தல் பார்வையாளர்களும், போலீஸ் அப்சர்வர்களும், தேர்தல் செலவு கண்காணிப்பாளர்களும் அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசி நேரத்திலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார் இருந்தால், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அதுதவிர சி விஜில் என்ற ஆப் டவுன்லோட் செய்து, அதன் வாயிலாகவும் தகவல் அளிக்கலாம்; விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் 15.51 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 14.75 கோடி ரொக்கம் ஆகும். தேர்தல் நெருங்கிவிட்ட கடைசி நேரத்திலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
தேர்தலில் நாளை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வாக்களிக்கும் வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி உடல் வெப்ப அளவீடு, கை சுத்தம் ஆகியவற்றிற்கு வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஒரு கைக்கு மட்டும் கையுறை வழங்கப்படும். அதை அணிந்து வாக்களித்துவிட்டு அங்கேயே உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட வேண்டும். பொதுமக்கள் நாளைய தேர்தலில் தங்களது ஜனநாயகக்கடமையை சரிவர செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 3343 என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு காமிரா உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. அங்கெல்லாம் மத்திய துணை ராணுவப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நுண் கண்காணிப்பாளர்களும் அந்த வாக்குச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக, கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறினார்.





