“எய்ம்ஸ் செங்கல் எடுத்து வரும் உதயநிதியால் கச்சத்தீவு மண்ணை எடுக்க முடியுமா?”
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை எடுத்துக்காட்டும் உதயநிதி ஸ்டாலினால், கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது; நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து சுற்றுச்சுவர் எழுப்பும்பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று குற்றம்சாட்டி வரும் திமுக இளைரணி செயலாளர் உதயநிதி, அங்கிருந்த செங்கல் ஒன்றை தன்னுடன் எடுத்துச் சென்று போகுமிடம் எல்லாம் பிரசாரத்தில் காட்டி வருகிறார்.
இதனிடையே, மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று துவரங்குறிச்சி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த மணப்பாறை மண் எனக்கு முக்கியமானது. ஏனென்றால், நான் முதன்முதலில் அரசியலை தொடங்கிய இடம் இதுதான். முதலாவது சட்டமன்றத் தேர்தலில் நான் பிரசாரம் செய்கின்றேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கூறி, அங்குள்ள செங்கலை எடுத்து அ.தி.மு.க.விடம் அருமையான கேள்வியை உதயநிதி ஸ்டாலின் கேட்டு வருகிறார். இது உண்மையில் நல்ல கேள்விதான்.
ஆனால் உதயநிதியை பார்த்து நான் கேட்கிறேன். உங்கள் கட்சியால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை உங்களால் எடுத்து வரமுடியுமா? அவர்கள் மீது குறையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி திமுகவினர் கேள்வி கேட்கிறார்கள். அ.ம.மு.க.வில் அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் நம் கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும் என்று அவர் பேசினார்.





