--- --:--:-- --

ஜெயிச்சா யானை வாங்கித்தருவேன்… இது பாஜக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி!!

bjp

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தணிகைவேல், தான் வெற்றி பெற்றால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

 

வரும் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் திருவண்ணாமலை தொகுதி, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, பாஜக வேட்பாளராக தணிகைவேல் நிறுத்தப்பட்டுள்ளார். அவர், திருவண்ணாமலை மண்டித் தெரு, பஜார் வீதி மற்றும் ஜோதி மார்க்கெட் பகுதியில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் பிரச்சாரம் செய்தார்.

 

தனது தேர்தல் பிரசாரத்தில் பேசிய தணிகைவேல், பொதுமக்களுக்கு பல்வேறு வாக்குறுதிஅளை தந்தார். அவர் பேசும்போது, பக்தர்களின் கோரிக்கை ஏற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்கித்தரப்படும். அதேபோல், சம்மந்தனூர் கிராமத்தில் வள்ளால மஹாராஜாவுக்கு மணி மண்டபம் கட்டித் தரப்படும். விஸ்வநாதபுரம் கிராமத்தில் குடிநீர் குழாய் அமைத்துத் தரப்படும் என்றார்.

 

அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு சட்டக்கல்லூரி, அரசு மகளிர் கலைக் கல்லூரி, காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன கிடங்குகள் சிப்காட், நவீன வாசன திரவிய தொழிற்சாலை அமைத்துத்தரப்படும் என்ற அவர், சாத்தனூர் அணையில் இருந்து பாசன நீர் இணை கால்வாய் அமைத்து தரப்படும். சென்னைக்கு தினசரி ரயில் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் கூறி, வாக்கு சேகரித்தார்.

 

கோவிலுக்கு யானை வாங்கித் தருவதாக பாஜக வேட்பாளர் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தது, சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவரது வெற்றிக்கு அண்ணாமலையார் உதவுவாரா? அவரது வேண்டுதல் நிறைவேறுமா என்பது மே 2ம் தேதி தெரியும்.

Leave a Reply

Right Menu Icon