தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைப்பு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலையை சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் சமையல் எரிவாயு விலை ரூ.75 உயர்த்தப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஏற்கனவே கொரோனாவால் மக்கள் பொருளாதார நிலையில் கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், காஸ் விலை, பெட்ரோல்-டீசல் விலை உயரவில்லை. சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் சமையல் எரிவாயு விலை சிறிதளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





