தேர்தல் பணிக்கு இடையூறு… முன்ஜாமின் கேட்டு அமைச்சர் கடம்பூர் ராஜு மனு
தேர்தல் அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கேட்டு அமைச்சர் கடம்பூர் ராஜு மனுதாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் களத்தில் உள்ளார். அண்மையில், ஊத்துப்பட்டிவிலக்கு என்ற இடத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற போது அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வாகனத்தையும் அவரது ஆதரவாளர்களின் வாகனத்தையும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட முயன்றனர்.
அப்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில், கடம்பூர் ராஜூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜூ தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தன் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்ஜாமீன் வழங்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.






