மேற்கு வங்கம், அசாமில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அசாம், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் அரசு பதவியில் உள்ள மேற்கு வங்கத்தில், மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு, 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 73 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக, 10,288 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இன்றைய தேர்தல் நடைபெறும் தொகுதிகள் பலவும் நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்தவை என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.
வட கிழக்கு மா நிலமான அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அப்பர் அசாம் மற்றும் பிரம்மபுத்ரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் 264 வேட்பாளர்கள் இன்று களத்தில் உள்ளனர்.
மேற்கு வங்கம் மற்றும் அசாமில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்பாகவே ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கொரோனா காலம் என்பதால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டு, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்காளர்களுக்கு ஒரு கைக்கு உறை வழங்கப்பட்டுள்ளது.






