நீதிபதி முன்பே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்..!
போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன்பே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.
2016ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் மேலூர் தொகுதியில் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மூன்று காவலர்கள் உட்பட 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுமிக்கு வன்கொடுமை நேர காரணமாக இருந்த அவரது பெற்றோர், அண்ணன், அத்தை மற்றும் அத்தை மகன் உட்பட குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே போக்சோ வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் அத்தை மகனான அசோக் தன்னையும் தனது தாயையும் குற்றவாளி இல்லை என்று கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கில் தானும் தனது தாயும் குற்றவாளிகள் என நீதிபதியிடம் கூறியதுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொண்டார்.






