--- --:--:-- --

வாகனச் சோதனையில் எம்.எல்.ஏ. மகன் காரில் ரூ.99 லட்சம் பறிமுதல்

currency

திருச்சியில், அதிமுக எம்எல்ஏவின் மகனது காரில் இருந்து ரூ.99.73 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேட்டைவாய்த்தலை பகுதியில், நேற்றிரவு ஆர்.ராஜசேகர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த எம்எல்ஏ பெயரிடப்பட்ட காரை நிறுத்தி, அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், உரிய ஆவணம் இன்றி காரில் ரொக்கமாக ரூ.99 லட்சத்து 73 ஆயிரத்து 500 இருப்பதைக் கண்டனர்.

 

ஆவணமில்லாமல் எடுத்துவரப்பட்ட அந்த தொகைய பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தினர். இதில் அந்த கார், முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.செல்வராசுவின் மகனுடையது என்று தெரிந்தது. ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் கணக்கிடப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

அத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டதால், வருமான வரித் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. வருமான வரித் துறையினர் வந்து காரில் இருந்த ஓட்டுநர் சிவக்குமார், முசிறி பகுதி அதிமுக நிர்வாகிகள் சத்யராஜ், ரவி, ஜெயசீலன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

 

வரும் தேர்தலில் முசிறி சட்டப்பேரவைத் தொகுதியில் எம்.செல்வராசு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடும் நிலையில், அவரது மகன் காரில் இருந்து பெரிய அளவில் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon