--- --:--:-- --

பிரசாரத்தில் பிரேமலதாவை சுற்றி வளைத்த அதிகாரிகள்… காரணம் இதுதான்!

Premalatha 02

விருதாச்சலத்தில் பிரசாரம் செய்யச் சென்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து, உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று, சுகாதாரத்துறையினர் அழைப்பு விடுத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் முதல் முறையாக விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அந்த சென்டிமென்ட் காரணமாக, பிரேமலதாவும் அதே தொகுதியில் களமிறங்கியுள்ளார். கடந்த 18ம் தேதி விருத்தாச்சலம் வந்து வேட்புமனு தாக்கல் செய்த அவர் அங்கேயே தங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 

இதற்கிடையே, தேமுதிக நிர்வாகி சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதியானது. ஆனால், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எவ்வித கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

 

இந்நிலையில் இன்று விருத்தாச்சலம் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பிரேமலதா விஜயகாந்தை, 3 பேர் கொண்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் சந்தித்தனர். அத்துடன், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வருமாறு பிரேமலதாவுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், இதற்கு கட்சி நிர்வாகிகள் மறுப்பு தெரிவிக்கவே, அங்கு சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கினார்.

 

பிரேமலதாவுக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பது உறுதியாக தெரியாத நிலையில், அவருடன் 100 பேர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர். எனினும் பிற்பகலுக்கு பிறகு பரிசோதனைக்கு வருவதாக பிரேமலதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon