--- --:--:-- --

தமிழகத்தில் கொரோனா 2வது அலை… சுகாதாரத்துறை எச்சரிக்கை!

corona 03

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை உருவாகியுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

 

இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். சட்டமன்றத் தேர்தல் நடக்கும் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம், கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்யும் போது கூட்டமாக மக்கள் திரள்கின்றனர். இது கொரோனா பரவலுக்கு வழிவகுத்துள்ளது.

 

கொரோனா அதிகரிப்பை தொடர்ந்து தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகள் மற்றும் கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வந்தது உடனடியாக ரத்து செய்யப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அண்மையில், தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

 

இதுதவிர, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த சூழலில், தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை உருவாகியுள்ளது என்றும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon